Saturday, August 11, 2012

6. ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து?

 

அத்தி மலர்ந்தாற்போல் திறந்த சன்னலூடே
கத்தி வீச்சைப் போல் கன்னி உன் பார்வை கண்டு
சித்தம் இழந்து செயலற்று நின்று போனேன்
பித்தன் எனைக்கண்டு பேதை நீ சிரித்தாய்!

செந்தணலின் சீற்றத்தைச் சிதறடிக்கும் நீர் போல
எந்தன் உள்ளத்தைக் குளிர்வித்த உன் சிரிப்பில்
சொர்க்கத்தைக் கண்டு சொக்கிப் போய் நின்ற நான்
அக்கம் பக்கத்தை மறந்ததில் வியப்புண்டோ?

ஆண்டாண்டு காலங்கள் அலுக்காமல் படித்து விட்டு
வேண்டாத தெய்வங்கள் அத்தனையும் வேண்டி - அனுமனும்
தாண்டாத பரீட்சை எனும் மாகடலைத்
தாண்டிப் பிடித்தேன் ஒரு பி.டெக் பட்டத்தை.

ஆனால்,

பார்க்காத பேப்பரில்லை, போடாத விண்ணப்பமில்லை
பிடிக்காத சிபாரிசில்லை, படி ஏறாத கம்பெனி இல்லை.
அத்தனையும் பயனற்று மனம் சலித்துப் போயிருக்கத
துப்பில்லாப் பட்டதாரி என்ற பட்டமும் பெற்றேனே!

என்னைச் சொல்லிக் குற்றமில்லை, நான் என்ன செய்வேன்?
நன்றாகப் படித்தேன் என்றுதான் நினைத்திருந்தேன்.
எத்தனைதான் படித்தாலும் அத்தனையும் நினைவிருக்க
நான் என்ன கடவுளா இல்லை கடன்காரனா?

பேட்டியிலே எனைக்கேட்ட கேள்வியெல்லாம் எங்கோ
கேட்டாற்போலிருந்ததென்னவோ உண்மைதான் - ஆனால்
எங்கே கேட்டாயென்று என்னையே திருப்பிக் கேட்டால்
ஐயோ எனக்கென்ன தெரியும்? நினைவில்லயே எதுவும்!

படித்த பாடத்தில் கேள்வி  பல கேட்டுப் பதில்
சொல்ல இயலாமல் நான் பட்ட பாட்டைக்
கண்டு களித்தும் சலிப்படையாமல் மேலும் எனைச் சீண்ட
பொது அறிவு என்று வேறு பொறுமையைச் சோதித்தார்!

அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் யாரென்றார்
எப்போதோ படித்த பெயரில் எதுவாக இருக்குமென்று நிதானம்
தப்பாமல் யோசித்துச் சொன்னேன் அபுல் கலாம் ஆஸாத் என்று
இத்தனை சிரிப்பு ஏன் இதற்கு என்பதுதான் விளங்கவில்லை!

நாளும் ஓர் கடிதம் தவறாமல் வந்ததெனக்கு - எத்தனை
ஆவலுடன் பிரித்தேன் ஒவ்வொன்றையும்! ஏமாற்ற்ம், ஏமாற்றம்!
அத்தனையுமே வருந்தி வருந்தி என்னை வருத்தின. அத்துடனா?
தபால்காரர் வேறு என்னைப் பார்த்துச் சிரித்தார் கேலியாக!

"மேலே படி" என்றார் தந்தை. "படி மேலே மாடி" என்றேன்
அவருக்கோ அடங்காத கோபம் - அதனால் எனக்கென்ன லாபம்?
இரண்டு நாள் பேசவில்லை என்னுடன் - பின்னொரு நாள் கேட்டார்
"மேலே படித்தால் என்ன?"

"மேலே ஏதுமில்லை படிக்க" என்றேன் நான் பணிவுடன்
"மேல்படிப்புத் தேவையற்ற மேதாவியெனெ நினைப்போ?"
புரியாமல் கோபத்துடன் பாய்ந்த அவர் மொழியை மறுத்தேன்
"மேலே ஏதுமில்லை" என்ற்து என் தலையைத்தான்!"

"இன்றுதான் தெரிந்ததோ அது உனக்கு?
என்றோ தெரியுமே எனக்கு" என்றார் சீற்றம் தணியாமல்.
தெரிந்தும் இப்படிச் சொன்னால் சொன்னவரைக்
கடிந்து நான் என்ன கூற முடியும்?

மீண்டும் அவர் பேச முயன்ற வேளையிலே,
"வீண் பேச்சும் விவாதமும் ஏனிங்கு - இதென்ன
சட்டசபையா?" என்ற என் பேச்சை எதிர்த்து
வெளி நடந்தார் அவர் ஒரு வீரமிகு எம்.எல்.ஏ. போல்!

வேலை ஒன்றெனக்குக் கிடைக்காத ஏக்கத்தில்
வேலை வேறேதும் இல்லாத என் தந்தை
நாடிப்போனார் ஒரு சோதிட சிகாமணியை
நாடகத்தின் அடுத்த காட்சி இங்கேதான் தொடங்கியது!

ஈரிரண்டு ராசிகளும் ஒன்பது கோள்களும்
விரைவாய்க் கூட்டிய கூட்டமொன்றில் கல்யாணம்
என்றொனக்குக் கடிதில் முடித்திட்டால் உடனே வேலையென்று
ஒருமித்த முடிவொன்றை எடுத்ததாக அவர் பகன்றார்.

அதை நம்பி என் தந்தை அலைந்தார் ஊர் ஊராய்
புதையலே கிடைத்தாற்போன்ற புத்துணர்வின் கிளர்ப்புடன்
ஆனால் இங்கும் கிட்டியது தோல்விதான் எனக்கு
எவருமே மாலையிட மாட்டாராம் வேலையில்லா வாலிபருக்கு!

சிறகொடிந்த பறவையானார் என் தந்தை - நானோ
ஒடிந்த சிறகானேன்! என் வாழ்க்கை இத்துடன்
முடிந்ததென்ற நினைப்பில் வேதனை நிரம்பிய நான்
விரக்தியுடன் வீதியில் நடந்து திரிந்தேன்

இப்போதுதானா  எனைப் பார்த்து நீ சிரிக்க வேண்டும்?
பலநாள் நீரின்றி வாடித் துவண்டு விட்ட
இளங்கொடியொன்று மழையில் நனைந்தாற்போல் நானும்
புளகித்தேன் உந்தன் விரிந்தவிழிப் பார்வையில்.

வேலையில்லா வாலிபன் என்றதுமே
பளிச்சென்று முகத்தைச் சுளித்துத் திருப்பித் தம்
கடைக்கண் நோக்கையும் கணநேர நோட்டீஸில்
கருணையின்றி விலக்கிக் கொண்டார் கணக்கற்ற காரிகையர்

அத்தனை பேர் மத்தியில் அல்லிக்கொடியே! நீ மட்டும்
அப்படி என்ன கண்டாய் என்னிடத்தில் சிறப்பாக?
ஒருவேளை என் நிலைமை தெரிந்து விட்டால் நீயும் உன்
அழகான புன்னகையை அழைத்துக் கொள்வாயோ திரும்ப?

இப்படி ஓர் ஐயம் என் மனதில் எழுந்ததுமே ஐயகோ
ஈதென்ன நான் கண்ட கோரமான காட்சி!
திரைப்பட வில்லன்போல் வந்த உன் தந்தை
இழுத்துச் சாத்தினாரே உன் அறைச் சன்னலை!

யாரோ முணுமுணுத்தார் என் காதில் விழுந்தது
பாவம் அந்தப் பெண் பைத்தியம் பிடித்தவள் என்று!
ஆயிரம் இடிகள் என் தலைமேல் விழுந்தாற்போல்
ஆவி துடித்துச் சவமாகிப் போனேனே!

*தாமரையில் அகப்பட்ட வண்டொன்று
பகலவன் வருவன் தாமரை மலரும் எனத் தவித்திருக்க
காலனை ஒத்த களிறொன்று தன் காலால்
பூவினைக் கசக்கித் துவைத்தாற்போல்

வாழ்விலே சுவையிழந்து விரக்தியில் ஆழ்ந்து போன என்னைக்
கண நேரச் சபலத்துக்கு ஆளாக்கி இப்படியோர்
மீளாத் தவிப்பில் ஆழ்த்திய ஆரணங்கே சொல்:
ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து?

(* இந்த நான்கு வரிகள் மட்டும் என் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் A.S.வைத்யநாதன் அவர்கள் மொழி பெயர்த்த ஒரு ஸம்ஸ்கிருதக் கவிதை வரிகள்)

கவிதை என்ற பெயரில் வார்த்தைக் கோவைகளை மடித்து எழுதப்பட்ட இந்த முயற்சி முதல் முதலாக என் எழுத்துக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது என்று கூறலாம். திருச்சி பிராந்தியப் பொறியியல் கல்லுரியில் (Regional Engineering College) - இது தற்போது தேசியத் தொழில் நுட்பக் கழகம் (National Institute of Technology)என்ற பெயரில் அழைக்கப்படுகிறது - 5-ஆண்டு B.Tech. படிப்பை முடிக்கும் தருவாயில் எங்கள் ரசாயனப் பொறியியல் (Chemical Engineering) பிரிவில் இருந்த 39 மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்ட 'பிரியாவிடை' நிகழ்ச்சி திருச்சி அரிஸ்டோ ஓட்டலில் 1972 மார்ச் மாதம் நடைபெற்றது. அப்போது துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நான் வாசித்த கவிதை இது.

என் எதிபார்ப்புகளுக்கெல்லாம் மேலாக என் நண்பர்களும் ஆசிரியர்களும் இதை மிகவும் ரசித்துப் பாராட்டினர். இந்த நிகழ்ச்சி திறந்தவெளியில் நடந்ததால், அருகில் இருந்த வேறு சிலரும் (சில இளம்பெண்கள் உட்பட!) என் கவிதையை ரசித்துக் கேட்டதாக நண்பர்கள் கூறினர். 

நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு சிறு குழுவின் முன்னிலையில் அரங்கேற்றிய இந்தக் கவிதையை இன்று வைய வலைப் பின்னலில் நானே வெளியிடும்போது பிரமிப்பாக இருக்கிறது. அன்று என்னை ஊக்குவித்த,  நல்லிதயம் படைத்த என் நண்பர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.No comments:

Post a Comment