Wednesday, June 15, 2016

38. பிரியா விடை

(திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் 1967 முதல் 1972 வரை ஐந்து ஆண்டுகள் படித்த பின் கல்லூரியை விட்டுச் செல்லு முன், என்னுடைய  batch மாணவர்களுக்கு  ஆசிரியர்களும், பிற மாணவர்களும் கொடுத்த விடையளிப்பு விழாவுக்காக எழுதப்பட்டு, கவிதை படிக்க 'நிர்வாக அனுமதி (Administrative Clearance)!' கிடைக்காததால் படிக்காமலே விடப்பட்ட இந்தக் கவிதை 44 ஆண்டுகள் கழித்து google (Bloggerஇன் உரிமையாளர்) ஆதரவில் அரங்கேறுகிறது!)

அறியாச் சிறுவராய் வந்தோம் அன்றொரு நாள்
அணையாச் சுடர் விளக்காய்த் திகழும் இக்கல்லுரிக்கு - என்றும்
குறையாச் செல்வமாம் கல்வியெனும் அருந்தனத்தை
நிறையாகப் பெற்று நாம் திரும்புகிறோம் இந்நாளில்.

குறைவான  காலம்தான் கூடியிருந்தோமென்றாலும்  காலத்தால்
கரையாத  நினைவுகளில் கலந்து நாம் வாழ்ந்து விட்டோம் - நம் கல்வி
நிறைவாகும் நாளின் நெருக்கமான இத்தினத்தில் - மனம்
நிறைவாகிப் பொங்கும் உணர்ச்சிகள்தான் எத்தனையோ!

கைகொள்ளாச் சுமையுடன், நமைப் பிரியச் சிறிதும்
மனம் கொள்ளாப் பெற்றோர், உறவினர், மற்றோரின்
மறையொண்ணா மனத் துயராம் பிரிவுத் துயரையும்
மனம் கொள்ளாமல் சுமந்து நாம் சுமைதாங்கிகளாய் வந்தோம்.

ஏழிரண்டாண்டு வனவாசம் சென்ற இராமனைப் போல்
ஊழி வெங்கானத்தில் பன்னிரண்டாண்டு நெறி பிறழாது
வாழ்க்கையைக் கழித்த பெருமைமிகு பாண்டவர் போல்
சூழ்வினையின் கட்டளையால் காடு சென்ற நளனைப் போல்

காக்கையைக் காணவும் காத துரம் செல்ல வைக்கும்
காலடிச் சுவடுகளும் காணற்கரிய பாலை ஒன்றில்
ஐந்தாண்டுக் காலம் எப்படி நாம் கழிப்பதென்று
நம்மை மலைக்க வைத்தது இம்மாபெரும் கல்லுரி!

ஆனால், காலம்தான் எத்தனை கடிதாகப் பறக்கிறது!
இங்கே,
கால் வைத்த நாள் தொட்டு நிகழ்ந்ததெல்லாம் அப்படியே நேற்றுத்
தான் நடந்தது போல்  நெஞ்சினிலே பதிந்திருக்க
காற்றெனப் பறந்து கடிதில் விரைந்த காலம் பிரிவெனும்
கூற்றினைக் காட்டிச் சிரிக்கிறது நமைப் பார்த்து!

இத்தனை நாள் இன்பமாக இங்கே நாம் வாழ்ந்த வேளை
எத்தனை எண்ணங்கள், ஏக்கங்கள், உணர்வுகள்!
அத்தனையும் புதிதாக அன்றலர்ந்த மலர் போல
எத்தனையோ நாள் இன்னும் நம் மனதை நிறைத்திருக்கும்.

அன்று எளிதான தோற்றத்துடன் நமை வரவேற்ற இக்கல்லூரி
இன்று அழகான கட்டிடங்கள் பலவற்றின் பெருமையுடன்
'என்றும் மறவேன் உமை' என்று மந்தகாச முகத்துடன்
தன்  மணிக்கூண்டுக் கரம் உயர்த்தி விடை கொடுத்து வாழ்த்தியதே!

எத்தனையோ வகை மாணவர் இங்குண்டு
அதில் பாதி வகை ஆசிரியப்  பெரியோரும் உண்டு!
அத்தனை  வகை மனிதரும் நம் மனதில்
அகலாமல் நிலைத்திடுவர் பசுமரத்தாணி போல்!;

கல்லுரி தினத்தன்று  கல்கண்டு மழை பொழிந்த
கல்வித்துறையின் கண்ணியமிகு செயலர்*
மாணவர் உலகில் ஏகலைவர் மறைந்ததையும் அதுபோல்
ஆசிரியரிடையே துரோணர் அகன்றதையும் எடுத்துரைத்தார்.

ஆனால் ஏகலைவர், துரோணர் எத்தனையோ பேர் இங்குண்டு**
ஆசிரியர் உதவியின்றி ஆற்றலுடன் கல்வி பெரும் ஏகலைவர்
மாணவர் உலகத்தின் சீரான மணிகளை ஆற்றலில்
அருச்சுனர் ஆக்கும் ஆசிரியர் துரோணர் பலர்!

இப்படி எத்தனையோ நினைவுகள், உணர்ச்சிகளைச் சுமந்து
எதிர்காலம் என்றொரு திசை நோக்கி விரையும் நாம்
ஐந்தாண்டு கால அனுபவத்தின் ஆறாத நினைவுகளை
என்றும் அழியாமல் நம் மனதில் ஆழமாய்ப் பதித்திருப்போம்!

* கல்லுரி ஆண்டு விழாவில் தமிழக அரசின் கல்வித் துறைச் செயலர் க.திரவியம், ஐ,ஏ .எஸ்  அவர்களின் பேச்சைக் குறிக்கிறது.

** வகுப்புகளுக்குச் சரியாக வராதபோதும், தங்கள் அறிவுக் கூர்மையினாலும் கடின உழைப்பினாலும் தாங்களே பாடங்களைப் படித்து சிறப்பான மதிப்பெண் பெரும் திறமை பெற்ற மாணவர்கள் இங்கு ஏகலைவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்!




   .  

No comments:

Post a Comment