Saturday, September 19, 2026

73. வரவில்லை!

தெருமுழுதும் பள்ளம் தோண்டிப் பலநாள்
மறுபாதையில் எம்மைச் செல்ல வைத்து
சிறு வாகனமும் செல்ல இயலா வீதியாக்கி
குறுக்கும் நெடுக்குமாய் ஊறும் பாம்புகள் போல்
குடிநீர்க் குழாய் அமைத்தார் அந்தோ!
வடியவில்லை சொட்டு நீரும் அதனின்று

பேருந்துக்குக் காத்திருப்போர் அயர்வு போக்கச்
சாரமாய் ஓர் குடை அமைத்தார் அவர் அமர - உடல்
சோராமல் காத்திருந்து பயணம் செய்வோம் நாம்
பேருந்தில் என்று காத்திருந்தார் பலர் அக்குடைக்கீழ்    
ஊர்வலமாய் அழைத்துச் செல்லும் பேருந்து வரவில்லை
காரணம்தான் தெரியவில்லை அதற்கு ஆங்கே.

மின்சாரம் இல்லா ஊர் வாழ் மாந்தர்தம்
இன்னல் போக்கி ஊரின் இருள் நீக்கி ஒளியூட்ட
மின் கம்பம் பல நாட்டிக் கம்பிகளை இணைத்துத்
தன் வழியே மின்சாரம் பாய்ந்து வர வகை செய்தார்
என் சொல்ல அங்கே வரவில்லை மின்சாரம்
மின் தட்டுப்பாடு என்று காரணம் சொன்னார்.

கவிதைக்கு இலக்கணம் கூறும் யாப்பு எனும்
கடிதான நூலைப் பலநாள் முயன்று கற்றுக்
கவிதை பதியத் தாளெடுத்துப் பேனா முனை பதித்துச்
செறிவான கவி படைக்க அமர்ந்தேன் நான் ஆயின்
வரிசையாய் வந்து விழவில்லை சொற்கள் ஊறவில்லை
செறிவான கற்பனை என் மனக்கேணியில் என்பதால்


72. ஒற்றுமை வளாகம்

('பாசமலர்' படத்தில் வரும் 'எங்களுக்கும் காலம் வரும்' மெட்டில்)

பல்லவி:
எங்களுக்கோர் இல்லம் உண்டு
ஒற்றுமைவ ளாகமென்று
அடுக்குமனை வீடுகளின்
அணிவகுப்பாக.

சரணம் 1:
நலமும் வளமும் இங்கே நாம் பெறவே
உளதே ஓர் மருத்துவ மனையும் இங்கே
விளையாடப் பல இடங்கள்
நடைபழக வழித்தடங்கள்
நீச்சல்குளம் நூல்நிலையம்
அனைத்துமே உண்டு.

சரணம் 2:
முதியோர் இளைஞர் சிறுவர் என பலரும்
அவரவர் மனம் நாடும் வழிநடந்து
பயனுடனே வாழும் வகை
பல உண்டு இவ்வுலகில்
இங்கேயும் அவை உண்டு
என்பது உண்மை.

சரணம் 3:
எஸ்பி ஐஓஏ எனும் அமைப்பு
செறிவுடனே அமைத்த ஒரு சிற்பம் இது
வானுயர்ந்த இருபத்தோர் 
கோபுரங்கள் தாயன்பில்
இன்னும் பல தலைமுறைக்கும்
இருப்பிடம் அளிக்கும்,




66. அலைகள்

கடற்கரை ஓரம் கால் பதிய நின்றபோது
கடுகி வந்து கால் தொடும் அலைகள்
தொட்ட சுகம் பாதம் உணருமுன்னே
விட்டுச் செல்லும் நம்மை விரைவாக.

பல பிறவி எடுக்கும் உயிர்கள் போல்
கடலிலிருந்து புதுப் பிறவி எடுத்து வந்து
கரை தொடும் இலக்கை எட்டியபின்
விலகி ஓடிக் கரைந்திடும் கடலுக்குள்.

ஓர் அலையை நானும் உற்று நோக்கியபோது அதன்
நேர் பார்வை என் மேல் நிலைத்தது ஓர் கணம்
முன் எப்போதோ என் காலைத் தழுவித் தன்
அன்பைக் காட்டி இருக்குமோ அந்த அலை?

சந்திப்போம் பலரை நாம் நம் வாழ்வில் தினமும்
சிந்திப்பதில்லை அவர் பற்றி அதன் பின்னால்
என்றோ நாம் சந்தித்த நபர் நம்மை நினைக்கக் கூடும்
இன்றும் நம்மை அன்புடன் ஆயின் நாமறியோம் அதை.

மீண்டும் அவர் நம்மைச் சந்தித்தால் பின்னாளில்
ஆன்ற மகிழ்வுடன் அணுகுவார் அவர் நம்மை
முந்தைய சந்திப்பின் நினைவினால் நெகிழ்ந்து
சந்தித்த நினைவோ நமக்கில்லாதபோது.

காலைத் தொட்ட அலை என்னை அறிந்ததை
மேலைக் கதிரவன் பார்த்து என்னை எள்ளியபோது
பாலைவனத்தில் பூத்த மலர் போல் என் மனிதில்
மூலையில் எழுந்த சிந்தனை இது.

அனைவரிடம் அன்பு காட்டும் இனிய பண்பை
முனைப்பாய்க் கடைப்பிடித்து அதை நம் வாழ்க்கை
முறையாய்க் கொண்டால் இல்லை இச்சங்கடம்
குறைவின்றி அனைவரிடமும் அன்பு காட்டுவதால்.

69. வாழ்த்த வழியில்லை!

வாழ்த்த வேண்டும் பிறர் நம்மை நம் பெருமை பல கூறி,
மாற்றமாய் என்னையே நான் வாழ்த்தும் முயற்சியில்
ஏற்றமாய் இறங்கியபோது கண்டுணர்ந்தேன் அதிர்ந்து
கூற்றமாய் எனக்குள்ளே அமர்ந்திருக்கும் எதிரியை!

என்ன சொல்லி வாழ்த்த என்னை என்று சிந்தித்து
சொன்ன சொல் தவறாதவன் என்று கூறி மகிழ்ந்தால்
என்னிடம் சொன்னவற்றையே செய்ததில்லை
சொன்னபடி நீ என்று இடித்துரைக்கும் ஒரு குரல் உள்ளிருந்து.

அடக்கமானவன் நானென்று பெருமை கொண்டு மகிழ்ந்தால்,
அணியாய் விளங்கும் அடக்கம் சாதனைகள் செய்தவர்க்கே
சிறகை மடக்கி வைத்துத் தரையில் தடுமாறி ஊர்ந்தபறவை நீ
பிறகு உனக்கேன் அடக்கம் என்று மடக்கும் அக்குரல் மீண்டும்.

கற்றவன் நான் மறுக்க முடியுமோ இதை என்று நான் மகிழ்ந்தால்
உற்ற துணையாய்க் கொள்ளவில்லையே என்றும் உன் வாழ்வில்
கற்ற கல்வியை நீ என்று கருணையின்றி எனைச் சாடும் உடனே
பெற்ற தாயினும் மேலாக என்னை அறிந்த அந்தக் குரல் மீண்டும்.

இப்படி என் பெருமையென்று எதை நான் உரைத்தாலும் என்
உட்புறமிருந்து உண்மையை விண்டுரைக்கும் உள்மனம் ஒன்று
என்னிடம் உண்டென்ற பெருமையை நான் எடுத்துரைத்ததும்
தன் பெருமைதனை மறுக்க முடியாமல் மௌனித்தது உள்மனம்.



71. குட்டிக் கவிதைகள்

          1. வள்ளுவர் வழியில்

சிரித்து வாழ்ந்த நாட்களே அதிகம்
காரணம் வள்ளுவப் பெருந்தகை
அவர்தானே சொன்னார் அறிவுரை
துன்பம் வரும்போது சிரியென்று!

2. பறந்து செல்ல நினைத்து விட்டேன்!

பறந்து செல்ல ஆசைப்பட்டுச்
சிறகில்லையே தனக்கென்று
மறுகிய கோழிக்குஞ்சின்
குறை தீர்ந்தது விரைவில்
பறந்தது அது ஓர் கொடும்
பருந்தின் வாயில் அமர்ந்து.

           3. அமரருள் உய்க்கும்?

என் உயரம் நான் அறிவேன்
என்றெண்ணி இருந்தேன் அடக்கமாய்
பொங்கி வந்த ஆசைகளைக் கொன்று
அந்தோ நிகழ்ந்ததென்ன ஆங்கே?
என் தோளில் கையூன்றி எம்பி
என் தலை மேல் தாவி என்னை
முந்திச் சென்று மேலே நின்றார்
என்னில் உயரம் குறைந்தோர்.



Sunday, September 13, 2026

68. நம்பிக்கை நாயகன்

சிறுவர்கள் நாங்கள் ஆற்று மணலில் விளையாடிக் களைத்து
கதிரவன் மறைந்ததும் தம் தம் வீடுகளுக்குத் திரும்புகையில்
நந்திபோல் நிற்கும் சாலை நடுவே ஒரு சிறு கோவில்
தொந்தி கணபதியின் திருக்கோவில்.

கும்பிட்டுத் தலையில் கொட்டிக் கொண்டு வலம் வந்து
தம் தம் வழியே பிரிவோம் நண்பர்கள் இல்லங்கள் நோக்கி
விரைவில் வழிபட்டு மனநிறைவுடன் செல்ல வைக்கும்
பிறைசூடன் மைந்தனின் குறு கோவில்.

பெருமாள் சிவன் துர்க்கை மாரியம்மன் ஐயனாரென்று
பரம்பரைப் பழக்கத்தில் வழிபடும் அனைவர்க்கும்
நெருக்கமாய் இருக்கும் சிற்றெலி வாகனன் முகத்தில்
களிறு கை கொண்டவன் சிறு கோவில்.

எதையோ செய்து எப்படியோ வாழ்ந்தாலும் தம் மனதில்
விதையாய் இருக்கும் இறைப்பற்றை நீரூற்றி வளர்ப்போருக்கு
நம்பிக்கை அளிக்கும் வாழ்வில் எந்நாளும் எப்பொழுதும்
தும்பிக்கை நாயகன் திருக்கோவில்.


Wednesday, September 2, 2026

67. தலைப்புத் தாருங்கள்!

தெரிந்த பொருள் பற்றித் தெளிவாகப் பேசினால் யாம்
அறிந்த பொருள்தானே இது என்பீர் அலட்சியமாய் 
புதிய பொருள் பற்றிப் புரியும் வகையில் கூறினாலோ
புரியவில்லை எமக்கு இது என்று புறம் தள்ளுவீர்

அதனால்தான் கேட்கிறேன் தலைப்புத் தாருங்கள் என்று
இதமான என் பேச்சை இழித்து எதை நீங்கள் சொன்னாலும்
பதமாகச் சொல்வேன் ஒரு பதிலை உமக்கு உறைக்க
இது நீவிர் எனக்களித்த தலைப்புதானே என்பதைச் சுட்டி.

70. மனம், மனம் அது கோவிலாகலாம்!


உள்ளிருந்து உடலை இயக்கும் மனம் என்னும் மந்திர ரிமோட்
அளவில்லா ஆற்றல் கொண்ட உருவற்ற உயர்சக்தி ரோபோட்
கோவிலாகலாம் மனம் என்றார் கவிஞர், ஆனால் அதன்
தாவலால் நாம் படும் துன்பம் அடங்கா எக்கணக்கிலும்.

ஒன்றை விரும்பும் மனம், அதைக் கொள்ள உடலும்
நன்றாய்ச் செயல்படும் பாங்காய், கிட்டிய பயனைத்
துய்ப்பது உடல்தான் உண்மை, ஆயின் தீப்பயன் எனும்
துன்பத்தை ஏற்பதும் உடல்தானன்றோ உலகில்!

ஆடச் சொல்லும், பாடச் சொல்லும், தேடச் சொல்லும் பல்பொருள்,
ஓடச் சொல்லும் கடமை பொறுப்பு இவற்றைத் துறந்து,
மேடு பள்ளமென்று உடல் விழுந்தும் எழுந்தும் படும்
பாடுகளுக்குப் பின்னிருப்பது இந்தப் பாழும் மனமன்றோ!

முற்பகல் இனிப்பைத் துய்க்கும் உடல், மனம் சொல்லி,
பிற்பகல் படும் இன்னல் நீரிழிவு நோயின் தாக்கத்தால்
அத்தனைக்கும் ஆசைப்படும் மனத்தின் கட்டளைக்கு
மொத்தமாய்ப் பணிந்ததால் பெரும் துன்பம் உடலுக்கு.

மதம் கொண்ட யானையை அடக்குவார் அங்குசம் கொண்டு
மிதப்பில் திளைக்கும் மனத்தை அடக்க வழி தேடிச் சிந்தித்து
இறை சிந்தனை, தியானம், யோகம், ஒழுக்கம் என்று
முறை பல உண்டென்று கண்டறிந்தார் நம் முன்னோர்.

எத்தனை வழி இருந்தும் மனதை அடக்க விழைகையில்
அத்தனை வழிகளையும் அயராது செயல்படுத்தும் வகையில்
சத்தான உடல் தன்னை வருத்தியும் திருத்தியும் இயங்கப்
பித்தான மனத்தின் கட்டளை தேவையன்றோ!

அவன் அருளால் அவன் அடி பணிந்து என்ற ஆழ்வாரின்
தவச் சொல் போல், வேண்டும் மனதின் துணை நமக்கு,
மனதைக் கட்டுப்படுத்த, ஆயின் எவ்வாறு இயலும் இது?
மனமே மனம் வைத்தால் மட்டுமே சாத்தியம் இது!

வேண்டும் பொருளை நமக்கு வழங்க, வேண்டுவோம்
நாம் இறைவனிடம், அவன் குடியிருக்கும் கோவில் சென்று,
மனதைக் கட்டுப்படுத்த, வேண்டுவோம் நாம் மனதிடமே* 
மனம் ஒரு கோவில் என்று கவிஞர் கூறியது இதனால்தானோ! 

மனதிடம் - மனத்திடம், மனோதிடம் (மன உறுதி) என்று இருவகையிலும் பொருள் கொள்ளலாம்.