Friday, August 14, 2026
65. விடுதலை!
அடிமைத் தளையிலிருந்து விடுதலை - சுதந்திரம்
அறியாமையிலிருந்து விடுதலை - கல்வி
சோம்பலிலிருந்து விடுதலை - உழைப்பு
வெறுப்பிலிருந்து விடுதலை - அன்பு
கோபத்திலிருந்து விடுதலை - சகிப்புத்தன்மை
தன்னலத்திலிருந்து விடுதலை - பிறர் நலம் பேணல்
வறுமையிலிருந்து விடுதலை - முன்னெடுப்பு
நோயிலிருந்து விடுதலை - கட்டுப்பாடான வாழ்க்கை
மனச்சோர்விலிருந்து விடுதலை - சிந்தனை மாற்றம்
விரக்தியிலிருந்து விடுதலை - தன்னம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை
Wednesday, July 22, 2026
63. சுய அறிமுகம்
நாங்கள் வன்முறையை எதிர்ப்பவர்கள்
-வலியவர்களுடன் மோதும்போது!
நாங்கள் கண்டிப்பாக நடந்து கொள்பவர்கள்
-கடமையைச் செய்பவர்களிடம்
நாங்கள் விட்டுக் கொடுக்கும் இயல்புடையவர்கள்
-வேறு வழி இல்லாதபோது
நாங்கள் அநீதியை எதிர்ப்பவர்கள்
-அது எங்களுக்கு நிகழும்போது
நாங்கள் நல்லவர்கள்
-எங்களுடன் கொடியவர்களுடன் ஒப்பிடும்போது
நாங்கள் பொது உடைமைவாதிகள்
-பிறர் சொத்தைப் பங்கிட்டுக் கொள்வதில்
நாங்கள் தனிமனித உரிமைகளை மதிப்பவர்பள்
-எங்கள் உரிமைகளை
நாங்கள் கடமை வீரர்கள்
-நாங்கள் நினைத்ததை முடிப்பதில்
நாங்கள் பதவி ஆசை அற்றவர்கள்
-சிவலோக, வைகுண்டப் பதவிகளில்
நாங்கள் ஏழைகள்
-அறிவு, ஆற்றல், திறமை, நேர்மை இவற்றில்
நாங்கள் சொன்னதைச் செய்பவர்கள்
-உங்களிடம் சொன்னதை அல்ல
நாங்கள் கண்ணியமானவர்கள்
-எங்கள் வேடங்கள் கலையாதவரை.
நாங்கள் யாரென்று இப்போது தெரிந்திருக்குமே!
அதனால் என்ன, தேர்தல்தான் முடிந்து விட்டதே!
62. நிபந்தனை
வரதட்சிணை வாங்காமல்
வைரநகை வெள்ளிப் பத்திரம் கேட்காமல்
வாண வேடிக்கை வண்டி ஊர்வலம் வேண்டாமல்
விருந்து, வரவேற்பு வைபவங்கள் இல்லாமல்
வசதியற்ற பெண்ணை மணக்கத் தயார்
ஆனால், மாமனாரே!
வேலை மட்டும் வாங்கித் தர வேண்டும் எனக்கு!
61. புயல்
தென்றலின் கோபம்
மண்ணின் தளையிலிருந்து விடுபட முயலும்
மரங்களின் போராட்டம்
மனிதன் மீது இயற்கையின் படையெடுப்பு
கட்டிடங்களின் வலுவைச் சோதிக்கும் பரீட்சை
கண்ணுக்குப் புலப்படாத கண்ணகிகளின்
சாப விளைவு
எல்லா நீரும் ஒன்று சேர்ந்து உறவாடும்
குடும்ப வைபவம்
யாரோ நிறுத்த மறந்து விட்ட
இயற்கை எந்திரத்தின் வெடிப்பு
பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக
இயற்கையின் அனுதாப வெளிப்பாடு
பதுக்கல் தடுப்புச் சட்டத்துக்கு அஞ்சிப்
பதுக்கலிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட காற்று
மேடுபள்ளங்களை மாற்றி அமைக்கப்
புவி அரசின் சோஷலிச முன்னெடுப்பு!
60. பசுமைப் புரட்சி
நிகழ்காலப் பொய்களில்
கடந்தகால உண்மைகளைப் புதைத்து
எதிர்கால லாபங்களை நினைத்து
வஞ்சனை விதைகளைத் தூவி
அவதூறு நீரைப் பாய்ச்சி
நியாய உணர்வுகளைக் களைந்து
வன்முறை உரத்தை இட்டு
சுயநலப் பயிர்கள் செழித்து வளர
மலர்ந்தது பசுமைப் புரட்சி.
59. ஆசான்
கொஞ்சம் பூமிக்குக் கொடுப்பதால்
வள்ளல் பட்டம் பெற்ற மேகமே
கொள்ளை அடித்ததில்
கொஞ்சம் கிள்ளிக் கொடுத்து
குற்றத்தை மறைக்க எங்களுக்குக்
கற்றுக் கொடுத்து நீதானோ?
58. பரிணாம வளர்ச்சி
முற்றத்தில் பல நாளாய் எடுக்காமல் வைத்திருந்த
மிதிவண்டியைச் சுற்றிப் பிடித்திருந்த
முல்லைக் கொடியைக் கிள்ளி எறிந்தேன்
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின்
வழித்தோன்றல்தான் நானும் - ஆயினும்
பாரியிடம் பல தேர்கள் இருந்திருக்கும்
என்னிடம் இருப்பது ஒரு ஓட்டை சைக்கிள்தானே!
Tuesday, July 14, 2026
56. மாறுபாடு
முயற்சி முடியலாம் தோல்வியில் - விடா
முயற்சி என்றும் விடியும் வெற்றியில்
சேர்த்த செல்வம் கரையலாம் உப்பைப் போல்
பகிர்ந்த செல்வம் பல்கிப் பெருகும் எந்நாளும்.
உறவுகள் முறியலாம் தவறான புரிதலால்
உரிமையில் விளைந்த நட்பு என்றும் முறிவதில்லை.
கழுதை தேய்ந்து சிறுக்கலாம் கட்டெறும்பாய்
களிறு சுருங்காது தன் குன்றனைய உருவிலிருந்து.
உடல் ஓய்ந்து சோரலாம் மூப்பினால் - ஆயின்
மனம் என்றும் ஒளிரும் மங்கா விளக்காய்.
Saturday, July 11, 2026
55. செய்யாதன செய்வோம்!
மணம் இல்லா மலரையும் ரசிக்கலாம் அதன் அழகுக்காக
சினம் செல்லா இடத்திலும் கோபத்தைக் காட்டலாம் - நியாயத்தின் பக்கம் நின்று
இனம் சேரா இடத்திலும் இணையலாம் - நம் ஈடுபாட்டுக்காக
தனம் இல்லா நபர்களிடமும் கொடை பெறலாம் - அவரைப் பெருமைப்படுத்த
மனம் இல்லாச் செயலையும் மனமுவந்து செய்யலாம் - பிறர்க்கு உதவ
குணம் இல்லா மனிதரையும் மதித்து நடக்கலாம் - நம் பண்பின் வழிநடந்து.
Sunday, July 5, 2026
54.கனவும் நிஜமும்
கனவும் நிஜமும்
பூத்துக் குலுங்கும் மலர்வனம் அங்கே
வீற்றிருக்கும் புற்கள் தலைநமிர்ந்து நிறைவாய்
ஓங்கிய செடி ஒன்றின் மலரின் மடியில்
தேங்கிய நீராய் அமர்ந்திருக்கும் பனித்துளி.
பச்சைப் புல் மீது பார்வை பட்டு அதன் மேல்
இச்சை கொண்டபனித்துளி புல்மேல் குதித்து
மெல்ல அதைத் தழுவும் கற்பனையில் சிலிர்க்கையில்
வில்லன் போல் வந்து அதைக் கவ்விச் செல்லும் சூரியக்கதிர்!
Wednesday, July 1, 2026
53. அச்சம் உணர்!
அச்சம் தவிர் என்றுரைத்தான் தன் உயிரைத்
துச்சமாய் மதித்த மாகவி - ஆயினும்
அச்சம் துணைபுரியும் நன்மைகள் விளைந்து
அச்சில் சுழலும் இவ்வுலகம் செம்மை பெற.
கடன் கொடுத்து தவியவர் கேட்பார் தன்
கடனைத் திரும்பக் காலம் கடந்த நிலையில்
கடன் பெற்றார் மறுத்திடுவார் எளிதாய்த் தன்
கடனைக் காசில்லை என்ற காரணம் சொல்லி.
கடன் கொடுத்தார் கேட்பார் காலம் கனிந்ததும்
கடனுடன் வட்டியைச் சேர்த்துச் செலுத்த
கடன்பட்டார் கொடுத்திடுவார் காசைத் திரட்டி
அடகாய் ஆங்கே அவர் பொருள் இருந்ததால் அஞ்சி!
அண்டை வீட்டார் இல்லாத மனிதரில்லை அவருடன்
சண்டை போடாமல் வாழ்பவர் உண்டு தரணியில்
அந்நிலை எனக்கில்லை என் அண்டை எனக்கு
எண்ணொறாத் தொல்லை கொடுத்து வந்ததால்.
மறுபுறம் அவர்க்குண்டு மற்றோர் அண்டை வீடு
சிறு சச்சரவும் அவருடன் இல்லை என் அண்டைக்கு
குறுவாள் துணை கொண்டு குவலயம் ஆள்பவர் போல்
செருவுக்கு அஞ்சாத செம்பியர் அவர் என்பதால்.
நற்பண்பும் நல்லொழுக்கமும் நம் மனதில் பதிய
இன்சொலால் போதிப்பார் இனிய பண்புடையோர்
பின்கையால் அவர் சொல்லைப் புறம் தள்ளித்
தன் வழியே செல்வதே தரணியில் பலர் பண்பு.
அரசாங்கம் ஒன்றமைத்து உயர் அதிகாரம் அதற்களித்து
வளமாக இயற்றச் செய்வார் வரிசையாய்ச் சட்டம் பல
வட்டத்துள் அடங்காமல் திரியும் வல்லூறு குணத்தோரும்
கட்டத்தில் அடங்கிக் கட்டுப்பாடுடன் வாழ்வார் கண்டீர்!
Sunday, June 28, 2026
52. பெட்டகத்தின் சிரிப்பு
போட்டதெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் போல்
போடப் போட ஏற்று என்றும் நிரம்பி வழியாத
ரகசியப் பெட்டகம் ஒன்று உளது என்னிடம்
கவிழ்த்தேன் அதை ஒரு நாள் ஒரு பொருள் தேடி.
போட்டு வைத்த பொருள் கிட்டவில்லை என் தேடலில்
கேட்காத கேள்விக்கு விடை போல் வந்தன
வேண்டாத பொருட்கள் பலவும் வரிசையாய்
தோண்டத் தோண்ட மீண்டும் மீண்டும்.
குன்றாய்க் குவிந்த குப்பைகள் மலைப்பைத் தந்தன
எங்ஙனம் அவை இடம் பெற்றன இப் பெட்டகத்துக்குள்
என்ற வினாவை என்னுள் எழுப்பின.
போட்டு வைத்த மதிப்புப் பொருள் மாயமாய் மறைந்திட
ஓட்டை உடைசல்கள் நாட்டியம் ஆடி நகைத்தன.
பெட்டகத்தைக் கடிந்தேன் அதன் பொறுப்புத் துறப்புக்காக
'முட்டாளே தவறு எனதில்லை' என்றது பெட்டகம் கோபமாய்
'எங்கோ பார்த்தபடி நீ என்னுள் போட்ட பொருள் பலவும்
அங்கே தரையில் விழுந்து சிதறியதை அறியாய் நீ' என்றது.
'சேர்ந்த குப்பைகள் நீ சேமித்து வைத்தவைதான்
ஆழ்ந்த சிந்தனையில் நீ இருக்கும்போது - உன்
சிந்தனைகளைச் சேமிக்க என்னைத் திறந்து வைப்பதால்
சொந்தமாக வந்து என்னுள் துயிலும் பல குப்பைகளும்.
'ஈதறியா நீ உன் சிற்றறிவு கொண்டு என்னைச் சந்தேகித்து
தீதறியா என் மீது போடுகிறாய் பழி அனைத்தும்!
உன் நலம் கருதி நான் கூறும் அறிவுரையைக் கேட்பாய்
உன் செவிப்பறையை மூடாமல் கவனமாய்.
'எனக்குள் ஒரு பொருளை நீ சேர்க்க விழைகையில்
கவனம் எனும் குணத்தின் துணை கொள் தவறாமல்
குப்பைகளும் எனக்குள் அடைக்கலம் பெறும் அவ்வப்போது
தப்பாமல் அவற்றை அகற்றி விடு தொடர் செயலால்.'
பெட்டகத்துடன் நான் பேசித் தோற்றதை முற்றுமாய்
ஒட்டுக் கேட்ட என் மடிக்கணினி நகைத்தது
ஒலி எழுப்பிச் சிரித்தும் ஒளிக் கதிரால் தன்
களிப்பைப் பலர் அறியப் பறை சாற்றியும்.
'என் நினைவுப் பெட்டகத்தின் பெருமை அறிவீர் எசமானரே!
என்றோ நீர் சேமித்த பொருளையும் உமக்களிக்கும்
கண நேரத்தில் தன்னுள்ளே தேடி எடுத்து வந்து
கண்பார்வை தேவையில்லை அதன் தேடலுக்கு!'
ஏளனமாய்ப் பேசியது என் மடிக்கணினி.
'ஏன் இந்த வீண் பெருமை உனக்கு என் மடியில்
சேய் போல் தஞ்சம் அடைந்திருக்கும் உனக்கு?
உன்னிடம் சேமித்த பொருளைத் தேடி எடுக்க
நான் படும் பாட்டை நானே அறிவேன்'
என்றேன் என் கோபத்தை வெளிப்படுத்தி.
'காரணம் நீர்தான் புரவலரே! உம் நினைவுப் பெட்டகம்
தீர உரைத்தது போல் கவனத்துடன் செயல்படப் பழகுவீர்
தேடிய பொருள் உடன் கிடைக்கும் உம் நினைவுப் பெட்டியிலும்
உம் மடியில் கிடக்கும் இந்தக் கணினிப் பெட்டகத்திலும்'
பதிலடி கொடுத்தது மடியில் கிடந்த கணினி சற்றும் மயங்காமல்!
51. உள்ளே வெளியே
உள்ளே
ஒரு பெண்ணின் தீனமான அழுகுரல்
முகமூடி மனிதர்களின் பரபரப்பு அசைவுகள்
கைகளில் ஆயுதங்களுடன்
வெளியே
கூண்டில் அடைபட்ட புலிகளாய்க்
குறுக்கும், நெடுக்கும் அலைந்து
கையைப் பிசைந்து நிற்கும் உறவுகள்
உள்ளே
சன்னமான குரலில் இன்னொரு அழுகுரல்
முன்பு ஒலித்த அழுகுரலை அடக்கி.
முகமூடி மனிதர்களின் முறுவல்களை
முகமூடிகள் விழுங்கி விடக்
கண்கள் வழியே வெளிப்படும் மலர்ச்சி
வெளியே
விடுதலை பெற்ற கூண்டுப் புலிகள்
கவலை மேகங்கள் கலைந்த முகங்களுடன்
நற்செய்தி தாங்கி வெளி வரப் போகும்
மருத்துவரின் வருகையை
எதிர்நோக்கிக் காத்திருக்கும்.
Sunday, June 14, 2026
50. கேட்டதும், பெற்றதும்
எழுதுகோலால் ஏட்டைப் பலமுறை சிதைத்து
கடும் தவம் செய்த என் கொடுமை பொறுக்காமல்
உருக்கொண்டு என் முன் தோன்றினாள் கவிதைத்தாய்.
வரமென்ன வேண்டும் கேளென்றாள் கனிவாக.
வாரம் ஒரு கவிதை வேண்டுமென்று பணித்தார்
வாரத் துவக்க நாள் மாலைக் கூட்டத்தில்
சாரமுள்ள கவிதைகளை நானும் கவிதைச்
சாரலுக்கு வழங்க அருளென்று வேண்டினேன்.
கவிதைத்தாய் யோசித்தாள் கண்மூடி
கவிதை எழுதுவோர்தான் கண்மூடிச் சிந்திப்பர்
கவிதைத் தாயுமா இப்படி என்று வியந்து
கவலையுடன் காத்திருந்தேன் கண் கொட்டாமல்.
'கேட்ட வரம் உனக்கருள விருப்பம்தான் எனக்கு
நாட்டமுடன் கவி எழுத நீ விரும்புவதை ஏற்று' என்றவள்
மேட்டுவளையைப் பார்த்து சற்றே சிந்தித்தபின்
போட்டுடைத்தாள் ஓர் உண்மையை நான் அறிய.
'இறைவன் உனைப் படைத்தான் உடலளித்து,
மறை பொருளாய்ப் பல்வேறு சக்தியும் உடனளித்து
நிறைவாய்ச் சிந்திக்கும் திறனும் அவற்றில் ஒன்று
குறை ஒன்றும் வைக்கவில்லையே அவன் உனக்கு!
அற்புத விளக்கைத் தேய்த்தால் ஆங்கே
சட்டெனத் தோன்றி எசமானரின் கட்டளையைத்
தட்டாமல் நிறைவேற்றும் பூதம் போல் - கை
கட்டி நிற்கும் உன் சிந்தனைதான் சற்றே அதைத் தேய்த்தால்.
கவிதை வித்திடும் உன் சிந்தனையைச் சுண்டினால்
புவியில் புதைந்து மரமாய் விரியக் காத்திருக்கும் விதை போல்.
வித்துக்கள் முளை விட்டு மரமாகி விழுது விட்டு
சத்துள்ள கவிதைகளாய் ஊஞ்சலாடும் உலகில்.
என் வரம் தேவையில்லை உன் சிந்தையில் கவி பிறக்க
உன் உள்ளிருக்கும் சக்தியே உனை இயக்கி - உன்
சிந்தனையில் உருவாக்கும் ஒரு கருவை - அதன் எழுத்துருவம்
உந்தன் புகழை உரக்கக் கூறும் இவ்வுலகுக்கு.'
கவிதைத்தாயின் பேச்சில் கனிவில்லை என்றாலும்
கடிய உண்மையை அவள் உரைத்ததை உணர்ந்து
கண் விழித்தேன் நள்ளிரவில் துயில் நீங்கி - மீண்டும்
கண் துயிலுமுன் கவிதையாய்ப் பதித்தேன் அவள் உரையை.
Tuesday, June 9, 2026
49. Global Warming!
ஆறு பருவங்களாய்
ஆண்டைப் பிரித்தார் ஆன்றோர்,
இளவேனில், முதுவேனில்,
கார், கூதிர், முன்பனி, பின்பனி என.
அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும்
ஆதிக்கப் பேரரசன் போல்,
மற்ற பருவங்களின் பெரும்பகுதியைத்
தனதாக்கிக் கொண்டு,
ஆதிக்கம் செலுத்துகிறது,
முதுவேனில் எனும் கொடிய கோடை!
48. எனக்காக!
கன்றீந்து பாலுவக்கும்
தன்னலம் கருதாப்
பசுக்களும்,
உறக்கம்
துறந்து
லாரிகளில் பால் சுமந்து
விரதம் காக்கும்
ஓட்டுனர்களும்,
இரவு
பகல் மாறி வந்து
இயந்திரங்களை இயக்கி,
பால்தனைப் பதப்படுத்தி,
பைகளில் திணித்தணிப்பும்
திறம் பெற்ற தொழிலாளரும்,
பின்தூங்கி
முன்னெழுந்து
முன்காலைக் குளிர் பொறுத்து
லாரி வரும் வரை
காத்திருந்து
பாக்கெட்களைச் சுமந்து வரும்
ஊழியரும்
இணைந்து
வழங்குகிறார்கள்,
என்
காலைக் காப்பியை!
Saturday, April 11, 2026
47. கவிதை கைவரும்?
காலையில் எழுந்ததும் கவிதையா?
காப்பி குடித்துத்தான் பழக்கம் எனக்கு
கவிதை படித்துப் பழகுகிறேன் இனி
காப்பி குடித்துப் பழகியவர்கள் நாளடைவில்
காப்பி போடவும் கற்றுக் கொள்வது போல்
கவிதை படித்துப் பழகினால் பலநாள்
கவிதை எழுதுவதும் கைவரலாம் ஒருநாள்!
Wednesday, March 4, 2026
46. சிரித்து வாழ வேண்டும் - 2
சிரித்து வாழ வேண்டும்
துன்பக் கேணியில் ஊறி வரும் கண்ணீர்,
இன்பத்திலும் பெருகி வரும் பன்னீராய்.
இன்பத்தில் அழுவது நிகழுமென்றால்,
துன்பத்தில் சிரிப்பது இயலாதோ?
வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்;
மேடுபள்ளம் அது கொண்ட நடனம்.
மேட்டில் ஏறுகையில் களிப்பில் மிதப்பவர்,
பள்ளத்தில் சரிகையில் பரிதவிப்பது ஏனோ?
துன்பம் நேர்கையில் சிரி என்றார்
அன்பும் அறனும் பாதை என்ற வள்ளுவர்.
இன்பத்தில் இயல்பாக வரும் நகை
துன்பத்திலும் துணைநிற்றல் தலை
உழைப்பில் விளைவது உயர்வு – உடல்
களைப்பில் சுரப்பது வியர்வை – மனச்
சோர்வில் பிறப்பது அயர்வு – நல்
சிரிப்பில் தொலைவது சோர்வு
45. சிரித்து வாழ வேண்டும் - 1
சிரித்து வாழ வேண்டும்!
விடாது கருப்பு என்பது போல்
அடாது தொல்லைகள் துரத்தும்போது
சிரித்து வாழ்வது எப்படி என்று
சீற்றம் கொள்ளும் மானிடரே!
எண்ணிப் பாரும் என் நிலையை!
உங்களுக்கென்ன?
துன்பம் வந்தால்
அழுது விட்டுப் போய் விடுவீர்கள்.
ஆனால் என் நிலைமை?
துன்பங்களும், சோர்வுகளும்
புயல் போல் நெஞ்சை அலைக்கழித்தாலும்
என் உணர்வுகள்
என் உதட்டில்
புன்னகையாகத்தான் வெளிப்பட வேண்டும்!
காலையில் எழுந்து பல் துலக்கும்போது
என் நிலையை எண்ணிப் பார்த்தால்
நீங்களும் சிரித்து வாழத் தொடங்குவீர்கள்
நான் ஒரு பற்பசை விளம்பர மாடல்!
44. மூத்தோர் சொல் கேள் - 2
மூத்தோர் சொல் கேள்
யாத்தோரே அம்மூத்தோர்தானே
என்று வாதிட்டு – அதை
ஏற்காத சுயசிந்தனை
இயல்பல்ல, இறுமாப்பின் வெளிப்பாடு
பார்க்க இயலும் இன்றும்
இவ்வகை மனிதரை இவ்வையகத்தில்..
தம்பின்னோர் தம் பேச்சை
ஏற்காமல் போகையில்
தம் சொல் அவையேறாச்
சீற்றம் கொண்டு குமுறும்
மாந்தர் மறப்பர் முன்னோர்
சொல்லை மனதில்
ஏந்தாமல் தாம் செயல்பட்ட நிகழ்வுகளின்
சுவடுகளை
அனுபவம் புதுமை என்பார்
சிலர், ஆயின் தேடின் காண்போம்
அதன் வேர்கள்
புதைந்திருப்பது கடந்த காலத்திலென்று.
பெற்ற அனுபவம் வழங்கும் கற்றலை
என்பதால்
உற்ற துணையாவது நம்
முன்சென்றோர் சொல்லன்றோ?
சென்றார் அவர் பல இடம்,
கண்டார் பல பொருள்
வென்றார் பல முயற்சிகளில்,
அத்துடன் தோற்றும்
நின்றார் அவ்வப்போது,
இருவகை நிகழ்விலும்
நன்றாம் அவர் பெற்ற
அனுபவம் எனும் அறிவு
43. மூத்தோர் சொல் கேள் - 1
மூத்தோர் சொல் கேள்!
என் தந்தை சொல் எனக்கு
வேம்பு
என் மகன் என் சொல்லை
ஏற்காவிடில்,
அது அவன் வீம்பு!
கடந்த பல தலைமுறைகள்
கண்டறிந்த
விஞ்ஞான உண்மைகளின் மேல்
அடுக்கடுக்காய்க்
கட்டியதால் நாம் பெற்றவை
கணினி, இணையம், செயற்கை
நுண்ணறிவு.
தந்தையின் செல்வத்தைத்
தனதாக்கிக் கொண்டு
அதை மேலும் பெருக்குவதுதான்
அறிவு.
மூத்தோர் சொல் எனும்
செல்வத்தை சுவீகரித்து
அதில் நம் அனுபவ அறிவைச்
சேர்த்து
அதை மெருகூட்டுவதே
பகுத்தறிவு!
42. ஒரு புகைப்படத்தின் அடிக்குறிப்பு
ஒரு புகைப்படத்தின் அடிக்குறிப்பு
நாய்க்காதுக்கு மேட்ச் ஆன
தொப்பி விளம்பரத்துக்கோ
நாய்க்கான ஷாம்பு விளம்பரத்துக்கோ
நான் போஸ் கொடுக்கும் புகைப்படமல்ல இது
இது என் குடும்பப் புகைப்படம்தான்
இது நாயல்ல என் சேய்
பால் பவுடர் கிடைப்பதில்லை
முலைப்பால் கொடுத்து
என் மார்பழகை இழக்க
எனக்கு விருப்பமில்லை
குழந்தையுடன் பிரச்னையும்
இரட்டையாகப் பிறப்பதால்
குழந்தையைத் தவிர்த்துக்
குட்டிநாயைத் தத்தெடுத்தேன்
ஆமாம், இது என்
குடும்பப் புகைப்படம்
41. ஆறிய காதல்!
ஆறிய காதல்
அன்று இப்படித்தான்
நெளிந்து,
தோளில் இடித்து,
மார்பு காட்டி
என்னை மயக்கினாய்
அது நம் முதல் இரவில்
சென்று முடிந்தது..
இன்று போதைக்கு மதுவும்,
போதாதற்கு மகளும்
பக்கத்தில் இருப்பதால்,
சற்றுத் தள்ளியே அமரடி கண்ணே!
நான் உனக்கு இப்போது
எப்போது வேண்டுமானாலும்
இழுத்து அருந்தக் கூடிய
கிணற்று நீர்தானே?
40. முறையீடு
அவசர கால அத்துமீறல்களை விசாரிக்கிறார்களாமே!
\ஞாயிற்றுக்கிழமையின் நெருக்கடியில்
அவசரகாலப் பிரகடனம் செய்து
என் தலை மீதிருந்த பொக்கிஷத்தை
அத்து மீறி அபகரித்து
அங்கஹீனம் செய்து விட்ட
சலூன்காரரின் அக்கிரமத்தை
விசாரிக்க யாரும் இல்லையா?
(1977ஆம் ஆண்டு எழுதப்பட்டது)













