Wednesday, July 22, 2026

63. சுய அறிமுகம்

 நாங்கள் வன்முறையை எதிர்ப்பவர்கள்
  -வலியவர்களுடன் மோதும்போது!
நாங்கள் கண்டிப்பாக நடந்து கொள்பவர்கள்
  -கடமையைச் செய்பவர்களிடம்
நாங்கள் விட்டுக் கொடுக்கும் இயல்புடையவர்கள்
  -வேறு வழி இல்லாதபோது
நாங்கள் அநீதியை எதிர்ப்பவர்கள்
  -அது எங்களுக்கு நிகழும்போது
நாங்கள் நல்லவர்கள்
  -எங்களுடன் கொடியவர்களுடன் ஒப்பிடும்போது
நாங்கள் பொது உடைமைவாதிகள்
 -பிறர் சொத்தைப் பங்கிட்டுக் கொள்வதில்
நாங்கள் தனிமனித உரிமைகளை மதிப்பவர்பள்
 -எங்கள் உரிமைகளை
நாங்கள் கடமை வீரர்கள்
 -நாங்கள் நினைத்ததை முடிப்பதில்
நாங்கள் பதவி ஆசை அற்றவர்கள்
 -சிவலோக, வைகுண்டப் பதவிகளில்
நாங்கள் ஏழைகள்
 -அறிவு, ஆற்றல், திறமை, நேர்மை இவற்றில்
நாங்கள் சொன்னதைச் செய்பவர்கள்
 -உங்களிடம் சொன்னதை அல்ல
நாங்கள் கண்ணியமானவர்கள்
 -எங்கள் வேடங்கள் கலையாதவரை.
நாங்கள் யாரென்று இப்போது தெரிந்திருக்குமே!
அதனால் என்ன, தேர்தல்தான் முடிந்து விட்டதே!


62. நிபந்தனை

 வரதட்சிணை வாங்காமல்
வைரநகை வெள்ளிப் பத்திரம் கேட்காமல்
வாண வேடிக்கை வண்டி ஊர்வலம் வேண்டாமல்
விருந்து, வரவேற்பு வைபவங்கள் இல்லாமல்
வசதியற்ற பெண்ணை மணக்கத் தயார்
ஆனால், மாமனாரே!
வேலை மட்டும் வாங்கித் தர வேண்டும் எனக்கு!

61. புயல்

 






தென்றலின் கோபம்

மண்ணின் தளையிலிருந்து விடுபட முயலும்
மரங்களின் போராட்டம்

மனிதன் மீது இயற்கையின் படையெடுப்பு

கட்டிடங்களின் வலுவைச் சோதிக்கும் பரீட்சை

கண்ணுக்குப் புலப்படாத கண்ணகிகளின்
சாப விளைவு

எல்லா நீரும் ஒன்று சேர்ந்து உறவாடும்
குடும்ப வைபவம்

யாரோ நிறுத்த மறந்து விட்ட
இயற்கை எந்திரத்தின் வெடிப்பு

பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக
இயற்கையின் அனுதாப வெளிப்பாடு

பதுக்கல் தடுப்புச் சட்டத்துக்கு அஞ்சிப்
பதுக்கலிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட காற்று

மேடுபள்ளங்களை மாற்றி அமைக்கப் 
புவி அரசின் சோஷலிச முன்னெடுப்பு!

60. பசுமைப் புரட்சி

 நிகழ்காலப் பொய்களில் 
கடந்தகால உண்மைகளைப் புதைத்து
எதிர்கால லாபங்களை நினைத்து
வஞ்சனை விதைகளைத் தூவி
அவதூறு நீரைப் பாய்ச்சி
நியாய உணர்வுகளைக் களைந்து
வன்முறை உரத்தை இட்டு
சுயநலப் பயிர்கள் செழித்து வளர
மலர்ந்தது பசுமைப் புரட்சி.

59. ஆசான்

கடலிலிருந்து நீரைத் திருடிக்
கொஞ்சம் பூமிக்குக் கொடுப்பதால்
வள்ளல் பட்டம் பெற்ற மேகமே
கொள்ளை அடித்ததில்
கொஞ்சம் கிள்ளிக் கொடுத்து
குற்றத்தை மறைக்க எங்களுக்குக்
கற்றுக் கொடுத்து நீதானோ? 

58. பரிணாம வளர்ச்சி


முற்றத்தில் பல நாளாய் எடுக்காமல் வைத்திருந்த
மிதிவண்டியைச் சுற்றிப் பிடித்திருந்த
முல்லைக் கொடியைக் கிள்ளி எறிந்தேன்
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின்
வழித்தோன்றல்தான் நானும் - ஆயினும்
பாரியிடம் பல தேர்கள் இருந்திருக்கும்
என்னிடம் இருப்பது ஒரு ஓட்டை சைக்கிள்தானே!

Tuesday, July 14, 2026

56. மாறுபாடு

முயற்சி முடியலாம் தோல்வியில் - விடா
முயற்சி என்றும் விடியும் வெற்றியில்

சேர்த்த செல்வம் கரையலாம் உப்பைப் போல்
பகிர்ந்த செல்வம் பல்கிப் பெருகும் எந்நாளும்.

உறவுகள் முறியலாம் தவறான புரிதலால்
உரிமையில் விளைந்த நட்பு என்றும் முறிவதில்லை.

கழுதை தேய்ந்து சிறுக்கலாம் கட்டெறும்பாய்
களிறு சுருங்காது தன் குன்றனைய உருவிலிருந்து.

உடல் ஓய்ந்து சோரலாம் மூப்பினால் - ஆயின் 
மனம் என்றும் ஒளிரும் மங்கா விளக்காய்.

Saturday, July 11, 2026

55. செய்யாதன செய்வோம்!


மணம் இல்லா மலரையும் ரசிக்கலாம் அதன் அழகுக்காக 

சினம் செல்லா இடத்திலும் கோபத்தைக் காட்டலாம் - நியாயத்தின் பக்கம் நின்று

இனம் சேரா இடத்திலும் இணையலாம் - நம் ஈடுபாட்டுக்காக 

தனம் இல்லா நபர்களிடமும் கொடை பெறலாம் - அவரைப் பெருமைப்படுத்த 

மனம் இல்லாச் செயலையும் மனமுவந்து செய்யலாம் - பிறர்க்கு உதவ 

குணம் இல்லா மனிதரையும் மதித்து நடக்கலாம் - நம் பண்பின் வழிநடந்து.

Sunday, July 5, 2026

54.கனவும் நிஜமும்

                                       கனவும் நிஜமும் 

 பூத்துக் குலுங்கும் மலர்வனம் அங்கே
வீற்றிருக்கும் புற்கள் தலைநமிர்ந்து நிறைவாய்
ஓங்கிய செடி ஒன்றின் மலரின் மடியில்
தேங்கிய நீராய் அமர்ந்திருக்கும் பனித்துளி.

பச்சைப் புல் மீது பார்வை பட்டு அதன் மேல்
இச்சை கொண்டபனித்துளி புல்மேல் குதித்து
மெல்ல அதைத் தழுவும் கற்பனையில் சிலிர்க்கையில்
வில்லன் போல் வந்து அதைக் கவ்விச் செல்லும் சூரியக்கதிர்!

Wednesday, July 1, 2026

53. அச்சம் உணர்!

அச்சம் தவிர் என்றுரைத்தான் தன் உயிரைத்
துச்சமாய் மதித்த மாகவி - ஆயினும்
அச்சம் துணைபுரியும் நன்மைகள் விளைந்து
அச்சில் சுழலும்  இவ்வுலகம் செம்மை பெற.

கடன் கொடுத்து தவியவர் கேட்பார் தன்
கடனைத் திரும்பக் காலம் கடந்த நிலையில்
கடன் பெற்றார் மறுத்திடுவார் எளிதாய்த் தன்
கடனைக் காசில்லை என்ற காரணம் சொல்லி.

கடன் கொடுத்தார் கேட்பார் காலம் கனிந்ததும்
கடனுடன் வட்டியைச் சேர்த்துச் செலுத்த
கடன்பட்டார் கொடுத்திடுவார் காசைத் திரட்டி
அடகாய் ஆங்கே அவர் பொருள் இருந்ததால் அஞ்சி!

அண்டை வீட்டார் இல்லாத மனிதரில்லை அவருடன்
சண்டை போடாமல் வாழ்பவர் உண்டு தரணியில்
அந்நிலை எனக்கில்லை என் அண்டை எனக்கு
எண்ணொறாத் தொல்லை கொடுத்து வந்ததால்.

மறுபுறம் அவர்க்குண்டு மற்றோர் அண்டை வீடு
சிறு சச்சரவும் அவருடன் இல்லை என் அண்டைக்கு
குறுவாள் துணை கொண்டு குவலயம் ஆள்பவர் போல்
செருவுக்கு அஞ்சாத செம்பியர் அவர் என்பதால்.

நற்பண்பும் நல்லொழுக்கமும் நம் மனதில் பதிய 
இன்சொலால் போதிப்பார் இனிய பண்புடையோர்
பின்கையால் அவர் சொல்லைப் புறம் தள்ளித்
தன் வழியே செல்வதே தரணியில் பலர் பண்பு.

அரசாங்கம் ஒன்றமைத்து உயர் அதிகாரம் அதற்களித்து 
வளமாக இயற்றச் செய்வார் வரிசையாய்ச் சட்டம் பல
வட்டத்துள் அடங்காமல் திரியும் வல்லூறு குணத்தோரும்
கட்டத்தில் அடங்கிக் கட்டுப்பாடுடன் வாழ்வார் கண்டீர்!