எழுதுகோலால் ஏட்டைப் பலமுறை சிதைத்து
கடும் தவம் செய்த என் கொடுமை பொறுக்காமல்
உருக்கொண்டு என் முன் தோன்றினாள் கவிதைத்தாய்.
வரமென்ன வேண்டும் கேளென்றாள் கனிவாக.
வாரம் ஒரு கவிதை வேண்டுமென்று பணித்தார்
வாரத் துவக்க நாள் மாலைக் கூட்டத்தில்
சாரமுள்ள கவிதைகளை நானும் கவிதைச்
சாரலுக்கு வழங்க அருளென்று வேண்டினேன்.
கவிதைத்தாய் யோசித்தாள் கண்மூடி
கவிதை எழுதுவோர்தான் கண்மூடிச் சிந்திப்பர்
கவிதைத் தாயுமா இப்படி என்று வியந்து
கவலையுடன் காத்திருந்தேன் கண் கொட்டாமல்.
'கேட்ட வரம் உனக்கருள விருப்பம்தான் எனக்கு
நாட்டமுடன் கவி எழுத நீ விரும்புவதை ஏற்று' என்றவள்
மேட்டுவளையைப் பார்த்து சற்றே சிந்தித்தபின்
போட்டுடைத்தாள் ஓர் உண்மையை நான் அறிய.
'இறைவன் உனைப் படைத்தான் உடலளித்து,
மறை பொருளாய்ப் பல்வேறு சக்தியும் உடனளித்து
நிறைவாய்ச் சிந்திக்கும் திறனும் அவற்றில் ஒன்று
குறை ஒன்றும் வைக்கவில்லையே அவன் உனக்கு!
அற்புத விளக்கைத் தேய்த்தால் ஆங்கே
சட்டெனத் தோன்றி எசமானரின் கட்டளையைத்
தட்டாமல் நிறைவேற்றும் பூதம் போல் - கை
கட்டி நிற்கும் உன் சிந்தனைதான் சற்றே அதைத் தேய்த்தால்.
கவிதை வித்திடும் உன் சிந்தனையைச் சுண்டினால்
புவியில் புதைந்து மரமாய் விரியக் காத்திருக்கும் விதை போல்.
வித்துக்கள் முளை விட்டு மரமாகி விழுது விட்டு
சத்துள்ள கவிதைகளாய் ஊஞ்சலாடும் உலகில்.
என் வரம் தேவையில்லை உன் சிந்தையில் கவி பிறக்க
உன் உள்ளிருக்கும் சக்தியே உனை இயக்கி - உன்
சிந்தனையில் உருவாக்கும் ஒரு கருவை - அதன் எழுத்துருவம்
உந்தன் புகழை உரக்கக் கூறும் இவ்வுலகுக்கு.'
கவிதைத்தாயின் பேச்சில் கனிவில்லை என்றாலும்
கடிய உண்மையை அவள் உரைத்ததை உணர்ந்து
கண் விழித்தேன் நள்ளிரவில் துயில் நீங்கி - மீண்டும்
கண் துயிலுமுன் கவிதையாய்ப் பதித்தேன் அவள் உரையை.
No comments:
Post a Comment