Saturday, September 19, 2026

71. குட்டிக் கவிதைகள்

          1. வள்ளுவர் வழியில்

சிரித்து வாழ்ந்த நாட்களே அதிகம்
காரணம் வள்ளுவப் பெருந்தகை
அவர்தானே சொன்னார் அறிவுரை
துன்பம் வரும்போது சிரியென்று!

2. பறந்து செல்ல நினைத்து விட்டேன்!

பறந்து செல்ல ஆசைப்பட்டுச்
சிறகில்லையே தனக்கென்று
மறுகிய கோழிக்குஞ்சின்
குறை தீர்ந்தது விரைவில்
பறந்தது அது ஓர் கொடும்
பருந்தின் வாயில் அமர்ந்து.

           3. அமரருள் உய்க்கும்?

என் உயரம் நான் அறிவேன்
என்றெண்ணி இருந்தேன் அடக்கமாய்
பொங்கி வந்த ஆசைகளைக் கொன்று
அந்தோ நிகழ்ந்ததென்ன ஆங்கே?
என் தோளில் கையூன்றி எம்பி
என் தலை மேல் தாவி என்னை
முந்திச் சென்று மேலே நின்றார்
என்னில் உயரம் குறைந்தோர்.



Sunday, September 13, 2026

68. நம்பிக்கை நாயகன்

சிறுவர்கள் நாங்கள் ஆற்று மணலில் விளையாடிக் களைத்து
கதிரவன் மறைந்ததும் தம் தம் வீடுகளுக்குத் திரும்புகையில்
நந்திபோல் நிற்கும் சாலை நடுவே ஒரு சிறு கோவில்
தொந்தி கணபதியின் திருக்கோவில்.

கும்பிட்டுத் தலையில் கொட்டிக் கொண்டு வலம் வந்து
தம் தம் வழியே பிரிவோம் நண்பர்கள் இல்லங்கள் நோக்கி
விரைவில் வழிபட்டு மனநிறைவுடன் செல்ல வைக்கும்
பிறைசூடன் மைந்தனின் குறு கோவில்.

பெருமாள் சிவன் துர்க்கை மாரியம்மன் ஐயனாரென்று
பரம்பரைப் பழக்கத்தில் வழிபடும் அனைவர்க்கும்
நெருக்கமாய் இருக்கும் சிற்றெலி வாகனன் முகத்தில்
களிறு கை கொண்டவன் சிறு கோவில்.

எதையோ செய்து எப்படியோ வாழ்ந்தாலும் தம் மனதில்
விதையாய் இருக்கும் இறைப்பற்றை நீரூற்றி வளர்ப்போருக்கு
நம்பிக்கை அளிக்கும் வாழ்வில் எந்நாளும் எப்பொழுதும்
தும்பிக்கை நாயகன் திருக்கோவில்.


Wednesday, September 2, 2026

67. தலைப்புத் தாருங்கள்!

தெரிந்த பொருள் பற்றித் தெளிவாகப் பேசினால் யாம்
அறிந்த பொருள்தானே இது என்பீர் அலட்சியமாய் 
புதிய பொருள் பற்றிப் புரியும் வகையில் கூறினாலோ
புரியவில்லை எமக்கு இது என்று புறம் தள்ளுவீர்

அதனால்தான் கேட்கிறேன் தலைப்புத் தாருங்கள் என்று
இதமான என் பேச்சை இழித்து எதை நீங்கள் சொன்னாலும்
பதமாகச் சொல்வேன் ஒரு பதிலை உமக்கு உறைக்க
இது நீவிர் எனக்களித்த தலைப்புதானே என்பதைச் சுட்டி.

70. மனம், மனம் அது கோவிலாகலாம்!


உள்ளிருந்து உடலை இயக்கும் மனம் என்னும் மந்திர ரிமோட்
அளவில்லா ஆற்றல் கொண்ட உருவற்ற உயர்சக்தி ரோபோட்
கோவிலாகலாம் மனம் என்றார் கவிஞர், ஆனால் அதன்
தாவலால் நாம் படும் துன்பம் அடங்கா எக்கணக்கிலும்.

ஒன்றை விரும்பும் மனம், அதைக் கொள்ள உடலும்
நன்றாய்ச் செயல்படும் பாங்காய், கிட்டிய பயனைத்
துய்ப்பது உடல்தான் உண்மை, ஆயின் தீப்பயன் எனும்
துன்பத்தை ஏற்பதும் உடல்தானன்றோ உலகில்!

ஆடச் சொல்லும், பாடச் சொல்லும், தேடச் சொல்லும் பல்பொருள்,
ஓடச் சொல்லும் கடமை பொறுப்பு இவற்றைத் துறந்து,
மேடு பள்ளமென்று உடல் விழுந்தும் எழுந்தும் படும்
பாடுகளுக்குப் பின்னிருப்பது இந்தப் பாழும் மனமன்றோ!

முற்பகல் இனிப்பைத் துய்க்கும் உடல், மனம் சொல்லி,
பிற்பகல் படும் இன்னல் நீரிழிவு நோயின் தாக்கத்தால்
அத்தனைக்கும் ஆசைப்படும் மனத்தின் கட்டளைக்கு
மொத்தமாய்ப் பணிந்ததால் பெரும் துன்பம் உடலுக்கு.

மதம் கொண்ட யானையை அடக்குவார் அங்குசம் கொண்டு
மிதப்பில் திளைக்கும் மனத்தை அடக்க வழி தேடிச் சிந்தித்து
இறை சிந்தனை, தியானம், யோகம், ஒழுக்கம் என்று
முறை பல உண்டென்று கண்டறிந்தார் நம் முன்னோர்.

எத்தனை வழி இருந்தும் மனதை அடக்க விழைகையில்
அத்தனை வழிகளையும் அயராது செயல்படுத்தும் வகையில்
சத்தான உடல் தன்னை வருத்தியும் திருத்தியும் இயங்கப்
பித்தான மனத்தின் கட்டளை தேவையன்றோ!

அவன் அருளால் அவன் அடி பணிந்து என்ற ஆழ்வாரின்
தவச் சொல் போல், வேண்டும் மனதின் துணை நமக்கு,
மனதைக் கட்டுப்படுத்த, ஆயின் எவ்வாறு இயலும் இது?
மனமே மனம் வைத்தால் மட்டுமே சாத்தியம் இது!

வேண்டும் பொருளை நமக்கு வழங்க, வேண்டுவோம்
நாம் இறைவனிடம், அவன் குடியிருக்கும் கோவில் சென்று,
மனதைக் கட்டுப்படுத்த, வேண்டுவோம் நாம் மனதிடமே* 
மனம் ஒரு கோவில் என்று கவிஞர் கூறியது இதனால்தானோ! 

மனதிடம் - மனத்திடம், மனோதிடம் (மன உறுதி) என்று இருவகையிலும் பொருள் கொள்ளலாம்.



Friday, August 14, 2026

65. விடுதலை!


அடிமைத் தளையிலிருந்து விடுதலை - சுதந்திரம்
அறியாமையிலிருந்து விடுதலை - கல்வி
சோம்பலிலிருந்து விடுதலை - உழைப்பு
வெறுப்பிலிருந்து விடுதலை - அன்பு
கோபத்திலிருந்து விடுதலை - சகிப்புத்தன்மை
தன்னலத்திலிருந்து விடுதலை - பிறர் நலம் பேணல்
வறுமையிலிருந்து விடுதலை - முன்னெடுப்பு
நோயிலிருந்து விடுதலை - கட்டுப்பாடான வாழ்க்கை
மனச்சோர்விலிருந்து விடுதலை - சிந்தனை மாற்றம்
விரக்தியிலிருந்து விடுதலை - தன்னம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை


Saturday, August 8, 2026

64. அப்பா அளித்த யானை

யானையைப் பார்க்கும்போது
அப்பா நினைவு வராமல் போவதில்லை
யானை போல் உருவோ வலுவோ
கொண்டவர் இல்லை என் தந்தை
கண்டதில்லை அவரிடம் நான்
யானையின் நினைவாற்றலையும்,

என் பிள்ளைப் பருவத்தில் அவர் எனக்கு
அன்புடன் வாங்கித் தந்த மரயானை பொம்மை
மென் கயிற்றில் அதைக் கட்டி இழுத்து
ஊர்வலம் அழைத்துச் சென்ற
என் குழந்தைக் குதூகலம்
இன்றும் உளது என் மனதில் பதிவாக.

கனிவுடன் வளர்த்த தந்தை 
பரிந்து  அளித்த யானை
வனவிலங்குகளின் அரசன் என்று
அறிந்தேன் நான் பின்னாளில் - ஆனால் 
அன்றே அமர்ந்து விட்டது யானை
என் மன அரியணையில் அரசனாய்.

எப்போது நோக்கினாலும் ஓர் கணமாவது
தப்பாமல் என்னைச் சொக்க வைக்கும் யானை
கற்பனைக் கதைகளிலும் அதுவே
என் விருப்பப் பாத்திரம்
சற்றே அதைத் தவறாய்ச் சித்தரித்தாலும்
சட்டென்று புண்ணாகும் என் மனம்.

யானை பற்றிய மொழிகளில் எனக்குப் பிடித்தது
யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது
சாணை பிடித்த கத்தி போல் கூராய்ப் பதிந்தது
இம்மொழி என் மனதில் என் மறைவுக்குப் பின்னும்
அப்படி ஓர் பெயர் எனக்கு இருக்க வேண்டும்
என்ற பேராசை இலக்கை ஏற்படுத்தி!

Wednesday, July 22, 2026

63. சுய அறிமுகம்

 நாங்கள் வன்முறையை எதிர்ப்பவர்கள்
  -வலியவர்களுடன் மோதும்போது!
நாங்கள் கண்டிப்பாக நடந்து கொள்பவர்கள்
  -கடமையைச் செய்பவர்களிடம்
நாங்கள் விட்டுக் கொடுக்கும் இயல்புடையவர்கள்
  -வேறு வழி இல்லாதபோது
நாங்கள் அநீதியை எதிர்ப்பவர்கள்
  -அது எங்களுக்கு நிகழும்போது
நாங்கள் நல்லவர்கள்
  -எங்களுடன் கொடியவர்களுடன் ஒப்பிடும்போது
நாங்கள் பொது உடைமைவாதிகள்
 -பிறர் சொத்தைப் பங்கிட்டுக் கொள்வதில்
நாங்கள் தனிமனித உரிமைகளை மதிப்பவர்பள்
 -எங்கள் உரிமைகளை
நாங்கள் கடமை வீரர்கள்
 -நாங்கள் நினைத்ததை முடிப்பதில்
நாங்கள் பதவி ஆசை அற்றவர்கள்
 -சிவலோக, வைகுண்டப் பதவிகளில்
நாங்கள் ஏழைகள்
 -அறிவு, ஆற்றல், திறமை, நேர்மை இவற்றில்
நாங்கள் சொன்னதைச் செய்பவர்கள்
 -உங்களிடம் சொன்னதை அல்ல
நாங்கள் கண்ணியமானவர்கள்
 -எங்கள் வேடங்கள் கலையாதவரை.
நாங்கள் யாரென்று இப்போது தெரிந்திருக்குமே!
அதனால் என்ன, தேர்தல்தான் முடிந்து விட்டதே!