Wednesday, March 4, 2026

44. மூத்தோர் சொல் கேள் - 2

 மூத்தோர் சொல் கேள் 


மூத்தோர் சொல் அமுதம் என்றதோர் நல்மொழியை

யாத்தோரே அம்மூத்தோர்தானே என்று வாதிட்டு – அதை

ஏற்காத சுயசிந்தனை இயல்பல்ல, இறுமாப்பின் வெளிப்பாடு

பார்க்க இயலும் இன்றும் இவ்வகை மனிதரை இவ்வையகத்தில்..

 

தம்பின்னோர் தம் பேச்சை ஏற்காமல் போகையில்

தம் சொல் அவையேறாச் சீற்றம் கொண்டு குமுறும்

மாந்தர் மறப்பர் முன்னோர் சொல்லை மனதில்

ஏந்தாமல் தாம் செயல்பட்ட நிகழ்வுகளின் சுவடுகளை   

 

அனுபவம் புதுமை என்பார் சிலர், ஆயின் தேடின் காண்போம் 

அதன் வேர்கள் புதைந்திருப்பது கடந்த காலத்திலென்று.

பெற்ற அனுபவம் வழங்கும் கற்றலை என்பதால்

உற்ற துணையாவது நம் முன்சென்றோர் சொல்லன்றோ?

 

சென்றார் அவர் பல இடம், கண்டார் பல பொருள் 

வென்றார் பல முயற்சிகளில், அத்துடன் தோற்றும்

நின்றார் அவ்வப்போது, இருவகை நிகழ்விலும்

நன்றாம் அவர் பெற்ற அனுபவம் எனும் அறிவு   

No comments:

Post a Comment